தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார் (இரண்டாம் இணைப்பு)
ஆறாவது தடவையாகவும் தமிழக முதல்வராக ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) பதவியேற்றுள்ளார்.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இடம்பெற்ற விழாவில் இன்று பகல் 12.08 மணியளவில் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுள்ளார்.
ஆளுநர் ரோசய்யா முன்னிலையில் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துக்கொண்ட அவர், முதல்வராக பதவியேற்றதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
முன்னதாக நாட்டுப் பண் சுருக்கமாக இசைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், டி.ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன் ஆகிய 14 பேரும் கூட்டாக அமைச்சர்களாக பதவிப்பிரமாணமும், இரகசிய காப்பு பிரமாணமும் செய்து கொண்டனர்.
இவ்விழாவில், தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
தமிழக முதல்வராக ஜெயலலிதா இன்று பதவியேற்பு
தமிழக முதல்வராக அ.தி.மு.க பொது செயலாளர் ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) ஆறாவது முறையாக பதவியேற்கவுள்ளதோடு, அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.
புதிய அரசின் பதவியேற்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று பகல் 12 மணியளவில் நடைபெறவுள்ளதோடு, ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
பதவியேற்பு விழாவையொட்டி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் விழா ஏற்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் பதவியேற்பு விழாவை முன்னிட்டு குறித்த பகுதியில் பாதுகாப்பு பணிகளுக்காக அதிகமான பாதுகாப்பு பொலிஸார் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், தி.மு.க தலைவர் கருணாநிதி, தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு, மத்திய அரசின் சார்பில் அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும், பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்டோரும் பங்கேற்பர்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி ஐந்தாவது முறையாக முதல்வராக அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா பதவியேற்றதோடு, இதே நாளான இன்று இவர் ஆறாவது தடவையாகவும் பதவி ஏற்கின்றமை குறிப்பிடத்தக்கது.







0 comments:
உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>