(எம்.எப்.எம்.பஸீர்)
வரி செலுத்தாமல் சட்ட விரோதமாக நாட்டுக்குள் எடுத்து வரப்பட்ட சுமார் இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள், டெப் கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட ஒரு தொகை பொருட்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடவத்தை - கோணஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரதான வெளிச் செல்லும் வாயிலருகே முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை, விமான நிலையத்தின் பிரதான வெளிச் செல்லும் வாயில் ஊடாக இத்தகைய பதிவு செய்யப்படாத, வரி செலுத்தாமல் நாட்டுக்குள் கொண்டுவரப்படும் பொருட்களை குழுவொன்று எடுத்துச் செல்ல முற்படுவது குறித்து கோணஹேன அதிரடிப்படை முகாமுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரஞ்ஜித் பெரேராவின் உத்தரவுக்கு அமைய சுமார் 17 பேர் கொண்ட அதிரடிப்படை குழுவினர் சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர்.
அதிரடிப்படையினர் செல்லும் போது சந்தேக நபர்கள் பொருட்களை வேன் ஒன்றில் ஏற்றிக்கொண்டிருந்துள்ளதுடன் உடன் செயற்பட்ட அவர்கள் சந்தேக நபர்களுடன் பொருட்களையும் தமது பொறுப்பில் எடுத்து பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக சுங்கப் பிரிவினரிடம் கையளித்துள்ளனர்.
அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்ட பொருட்களில் வரி செலுத்தாது கொண்டுவரப்பட்ட கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப்கள் 2309 உம், கையடக்கத் தொலைபேசியின் உதிரிப்பாகங்கள் மற்றும் மெமரி சிப்கள் ஒரு தொகையும், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சிகரட்டுக்கள் ஒரு தொகையும் இருந்துள்ளன.
இதன் உண்மைப் பெறுமதி 2 கோடியே 34 இலட்சத்து 33978 ரூபா என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
பொருட்களையும் சந்தேக நபர்களையும் சுங்கப் பிரிவினர் பொறுப்பேற்று நடத்திய விசாரணைகளில் சந்தேக நபர்களுக்கு தலா 21 இலட்சம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.




0 comments:
உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>