நீருக்கடியில் மர்மம்
1995-ஆம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த நீச்சல் வீரர்கள் கடலுக்கடியில் சென்றபோது, கடலின் தரைப்பகுதியில் வட்டவடிவத்தில் மணல் திட்டுகளைப் பார்த்தனர். இது நிலப்பகுதியில் ஏற்கனவே காணப்படும் வடிவங்களைப் (crop circles) போலவே இருந்ததால், இவற்றின் மீதான ஆய்வு விரைவாகத் தொடங்கப்பட்டது. இது அறியப்பட்ட 10 ஆண்டுகளில் அடிக்கடி இதுபோல் தோன்றுவதும், மறைவதும் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் அர்த்தம் என்ன என்பது மட்டும் யாராலும் விளக்க முடியாத மர்மமாகவே இருந்தது.
ஆனால் அதற்குப் பதில் கிடைத்து விட்டது. இதுவும் ஒருவகையான மீன் தான்! குறிப்பாக வெள்ளைப் புள்ளி கோளமீன் (White Spotted Pufferfish) என்று அழைக்கப்படும் மீன் தான் இந்த மர்மத்துக்குப் பின்னால் இருக்கும் கதாநாயகன் ஆகும். கடலுக்கடியில் வாழும் இந்த மீன் தனது இணையினை கவர்வதற்காக, இது போன்ற வட்ட வடிவிலான அமைப்பினை ஏற்படுத்துமாம். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இந்த வகை மீன் வெறும் 12 சென்டிமீட்டர் மட்டுமே நீளமுடையது. ஆனால் தனது பின்பகுதியினைத் தொடர்ந்து அசைப்பதன் மூலம் ஏறக்குறைய 2 மீட்டர் விட்டம் கொண்ட வட்டவடிவிலான அமைப்பினை உருவாக்குகிறது. இதன் அருகில் வரும் பெண் மீன் இதனால் கவரப்பட்டால் அந்த மீனுடன் இணைந்து அந்த வடிவத்தின் மேல் முட்டைகளை இடும்.
பின்னர் ஆண் மீன் குஞ்சுகள் வெளிவரும் வரை முட்டைகளைப் பாதுகாக்கும். பின்னர் அந்த வடிவத்தினை அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடும். வெறும் 7 முதல் 9 நாட்கள் மட்டுமே இருக்கும் இந்த வடிவங்கள், ஒரு சில நாட்களில் நீரின் வேகத்தினால் விரைவாக அழிந்துவிடும்.
நேற்று மர்மமாக இருந்த ஒரு விஷயத்திற்கு இன்று விடை தெரிந்துவிட்டது. இதே போன்று தான், நமக்கு இன்று மர்மமாகத் தோன்றும் ஒரு விஷயத்திற்கு நாளை கண்டிப்பாக விடை தெரிந்துவிடும். என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே? இந்த அதிசய மீனைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? இதைப் பற்றிய உங்கள் கருத்தை மட்டும் இல்லை, எனது சிறு கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தையும் எனக்குக் கண்டிப்பாக அறியத் தாருங்கள்!
அது வரை தொடர்ந்தும் உங்கள் அன்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கும்,
உங்கள்
SciNirosh (Niroshan Thillainathan





0 comments:
உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>