அக்கரைப்பற்று - குறைந்து வரும் கல்வி மீதான அக்கறையும், அதிகரிக்கும் குற்றச் செயல்களும்.
---------------------------------------------------------------
அக்கரைப்பற்றில் கல்வியை நம்பும் மக்கள் இன்று குறைந்து விட்டார்கள். அன்றைய கல்வி மீதான மக்கள் அக்கறை இன்று இல்லை, அல்லது குறைந்து வருகிறது.
வலயத்தில் உள்ள பாடசாலைகளும் மூடுவிழாக் காணுகிறது. பாடசாலை, மாணவர் கல்வி மீதான மக்கள் அக்கறை குறைவுக்கு ஏற்ப இங்கே குற்றச் செயல்பளும் கூடிக் கொண்டே செல்கிறது. கல்வியை மக்கள் ஒரு வகையான பொருளாதார இலக்கு நோக்கிய பார்வையில் மட்டுமே நோக்கும் குறுகிய வாய்ப்பாட்டை (paradigm) எம்மத்தியில் அதிகரித்து வருகிறது. இது நகரமயமாக்கலின் எதிர்மறை விளைவுகளாகும். காலமாற்றத்திற்கு ஏற்ப எமது கல்விப் புலம் புதிய புத்தாக்கங்களைப் (creatuvities) போதிய அளவில் இன்னும் உருவாக்கித் தரவில்லை. எமது வளர்ச்சி பிள்ளைகளைத் தண்டித்தலில் (punitive) ஒரு மென் நடத்தையை ஏற்படுத்தியுள்ளதுதான் ஆனால் அதன் வெளியீடு பொருத்தமாக இல்லை. மனம் போன போக்கிலே இளையோர் சென்று கொண்டிருக்கிறார்கள்.
இன்று இப்பிரதேசம் குற்றச் செயல்களால் நிரம்பி வழிகின்றது. நாள்தோறும் மக்கள் பொலிஸ், சமாதான சபை, நீதிமன்றம் என அலைந்து திரிவதுடன் கணிசமான பண விரயமும், நேர விரயமும் கூட இவர்களுக்கு ஏற்படுகிறது. அண்மையில் சிறு குற்றப் பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் பரிசோதகர் வேலைப் பழு காரணமாக மயக்கமுற்று திடீர் சிகிச்சைப் பிரிவில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் அளவு முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன. சில பெண் பிள்ளைகள் பொலிஸுக்குச் சென்றதாலேயே "அவர்கள்" மூலமாக தமது வாழ்வை தொலைத்துவிட்டதாகவும் சம்பவங்கள் உண்டு.
மக்கள் பணம், பொருள், வீடு மீதான அக்கறையை அதிகரித்தே வருகிறார்கள். அத்துடன் கல்வியை ரியுசன் மாஸ்டர்களிடமும், மாணவர்களிடமும் மட்டுமே விட்டு விட்டார்கள். எத்தனை தந்தைகளுக்கு தனது பிள்ளை படிக்கும் வகுப்பு சரியாகத் தெரியும்? எத்தனை பெற்றோருக்கு தனது பிள்ளையின் வகுப்பாசிரியரைத் தெரியும்? எத்தனை பெற்றோருக்கு தனது பிள்ளையை அவர்களின் வயதுக்கு ஏற்ப சரியாக கண்காணிக்கத் தெரியும்? இதில் நன்கு படித்த பெற்றோரும் கோட்டை விட்டு விடுகிறார்கள். வெறுமனே வேளைக்குப் பணம் வழங்குதல், உடுப்பு, உபகரணங்கள் வாங்கிக் கொடுப்பது மட்டுமே ஒரு பிள்ளைக்குப் போதாது. அவர்களின் மனங்களை சரியாக தயார்படுத்த (mind preparation) நாம் முனைப்புக் காட்ட வேண்டும்.
சமூக ரீதியில் நோக்கின் சிங்கள சமூகமே பிள்ளைகளைப் பராமரிப்பதில் முன்னிலையிலுள்ளது. அவர்களின் "நாமிருவர் நமக்கிருவர்" நடைமுறையால் குடும்பங்கள் சிறியதாக இருப்பதால் கண்காணிப்பது இலகு. இருந்தாலும், குடும்பங்கள் மீதான நமது அக்கறை குறைவாகவே உள்ளது. நாம் பிள்ளைகளின் உணவுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை அவர்களின் பண்பு விடயத்தில் கொடுப்பதில்லை.
"அது சின்னப் பிள்ளை தானே வயது வந்தால் செய்ய மாட்டார்" எனச் சொல்லி அவர்களை நவீன பிரழ்வு நடத்தையின் பால் ஊக்கப்படுத்துகிறோம். இறுதியில் எமக்குள் எதிர்ப் பண்பாடு (counter culture) வலுப் பெறுகிறு. கோஷ்டி மோதல்கள், கட்சிச் சண்டைகள், தன்முனைப்பு மனோபாவம் (ego), தங்களுக்குள்ளான உயர்வு வாதம் (ethnocentrism) என்பன இன்று எம்மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன.
நாம் வீடு கட்டும் போது சீமந்து, மண், கல்லை வாங்கிக் கொடுத்தாலும் பக்கத்திலே நின்றால்தான் வேலை சரியாக நடக்கும். அதேதான் இங்கும். நாம் கண்களை காணி, கடை, வெளி நாட்டுப் பணம் என வைத்துக் கொண்டிருந்தால் ஆசிரியரும், அதிபரும், கல்வி திருவாகமும் மட்டும் என்ன செய்வது? மாணவர்களும் இந்திய சினிமாவை "இங்கே" பிரதிபலிக்கும் வண்ணமே உள்ளார்கள்.
இளையோர் மத்தியில் மது, மங்கை, போதை வஷ்த்து என எமது சமூகம் கீழ் நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. அண்மைக் காலம் முதல் "கஞ்சா" எனப்படும் போதைப் பொருள் அக்கரைப்பற்று பொலிஸ் பகுதியிலேயே அதிகமாகப் பாவிக்கப்படுவதும், விற்பனையாவதுமாக எமது பொலிஸ் நிலைய அறிக்கைகள் கூறுகின்றன.
பெற்றோர் மேலுள்ள ஒரு பக்கம் கல்வி, அதிகரிப்புப் பற்றியும், மறுபக்கம் குற்றச் செயல்களைக் குறைத்தல் பற்றியும் எமது அக்கறையை அதிகரிப்போம். அதனூடாக எமது சமூகம் எழுச்சி பெற உழைப்போம்.
ஏ.எல். நௌபீர்
BA, PG Dip in Applied Sociology, Dip in English.





0 comments:
உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>